இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஈரான் ஜனாதிபதியுடன் சவுதி இளவரசர் பேச்சுவார்த்தை
- இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
- ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.
துபாய்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு ஆய்வு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடர்ந்து 6வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் போர் குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பாலஸ்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.