உலகம்

அதிகாலை நடந்த ட்ரோன் தாக்குதல்... மாஸ்கோவில் கட்டிடங்கள் சேதம்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

Update: 2023-05-30 15:51 GMT
  • உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது.
  • தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் ரஷிய படைகளை முன்னேற விடாமல் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டு வந்த உக்ரைன் படைகள், கடந்த சில மாதங்களாக ரஷிய பகுதிகளை குறிவைத்து வான் தாக்குதல்களை நடத்துகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதேசமயம், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்திய 8 ட்ரோன்களை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்ததாக ரஷிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

5 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் மூன்று ட்ரோன்கள் தடுத்து திசைதிருப்பப்பட்டன. இது உக்ரைன் ஆட்சியின் பயங்கரவாத தாக்குதல் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவின் பல கட்டிடங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன என்றும், 2 பேர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறினார். தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலானது, உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து ரஷியாவிற்குள் ஊடுருவி நடத்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதேசமயம், இந்த தாக்குதல்கள் ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

Tags:    

Similar News