உலகம்

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2025-02-14 09:13 IST   |   Update On 2025-02-14 09:13:00 IST
  • தொழிலதிபர் விவேக் ராமசாமியை பிரதமர் மோடி சந்தித்தார்.
  • அதிபர் டிரம்புடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்தியாவில் இருந்து இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். கடந்த புதன்கிழமை பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். முன்னதாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அப்போது, பல முக்கியமான துறைகளில் தங்கள் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இரு தரப்பினரும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவிவில், அதிபர் டிரம்புடன் "சிறந்த" சந்திப்பை நடத்தியதாகவும், அவர்களின் பேச்சுவார்த்தை "இந்திய-அமெரிக்க நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை சேர்க்கும்" என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

"அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி MAGA பற்றிப் பேசுகிறார். இந்தியாவில், நாங்கள் ஒரு விக்சித் பாரதத்தை நோக்கிச் செயல்படுகிறோம். இது அமெரிக்க சூழலில் MIGA என மொழி பெயர்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா ஒன்றாக செழிப்புக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளன!" என்று மோடி எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

மோடியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விநியோகங்களை அதிகரிக்கும் நோக்கில், வாஷிங்டன் புது தில்லிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

Tags:    

Similar News