உலகம்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது

Published On 2022-07-16 02:50 GMT   |   Update On 2022-07-16 02:50 GMT
  • இம்ரான்கான் ஆட்சியில் சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது.
  • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

இஸ்லாமாபாத் :

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது என கூறி உரையைத் தொடங்கினார்.

சர்வதேச நிதியத்துடன் (ஐஎம்எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தை முந்தைய அரசு காலில் போட்டு மிதித்து எங்களுக்காக கண்ணி வெடிகளைப் போட்டது என்று சாடினார். இம்ரான்கான் அரசு தனது கடைசி வாரங்களில் அரசின் கஜானாக்கள் காலியாக இருந்தாலும் எரிபொருட்கள் விலையைக் குறைத்து, எங்களது அரசு சிக்கலில் விழுமாறு செய்தது என்றும் குற்றம்சாட்டினார்.

தனது புதிய அரசு பதவி ஏற்று, கனத்த இதயத்துடன்தான் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஏற்ப தாங்களும் விலையை உயர்த்தியதாக குறிப்பிட்டார்.

ஆனாலும் தற்போது கடவுளின் ஆசியுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாகவும், கடவுளின் கருணையால் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54-ம் குறைக்கப்படுவதாக அறிவித்து மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். இது நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது.

Tags:    

Similar News