உலகம்

அமெரிக்காவின் அழுத்தம்... எரிபொருள் தட்டுப்பாடு... இயல்பு வாழ்க்கையை இழந்துதவிக்கும் கியூபா

Published On 2026-02-18 15:27 IST   |   Update On 2026-02-18 15:27:00 IST
  • ‘எண்ணெய் இல்லை, பணமில்லை, எதுவும் இல்லை’
  • எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது. அமெரிக்கா வெனிசுலாவில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை மற்றும் மெக்சிகோ மீதான வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கியூபாவுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

கியூபாவின் மற்ற நட்பு நாடுகளும் எரிபொருள் வழங்க முன்வரவில்லை. மேலும் கியூபாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் மற்றும் அவற்றின் பராமரிப்புப் பணிகள் காரணமாக உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது இந்த தீவுநாடு.

எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இல்லாததால் சர்வதேச விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் கனடா போன்ற நாடுகள் விமான சேவையை நிறுத்தியுள்ளன. கியூபாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து மற்றும் கனடா குடிமக்களை எச்சரித்துள்ளன.

மேலும் கியூபாவின் முக்கிய திருவிழாவான ஹபனோஸ் சுருட்டு விழா இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் பல மருத்துவமனைகள் சேவைகளை குறைத்துள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டால் குப்பை அள்ளும் வாகனங்கள் இயங்காததால், தலைநகர் ஹவானாவில் தெருக்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் 'எண்ணெய் இல்லை, பணமில்லை, எதுவும் இல்லை' என கியூபாவின் இந்த நிலைகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நிலைமை மோசமாவதற்குள் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு வருமாறும் அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். கியூபாவின் பொருளாதாரத்தை முடக்குவதன் மூலம் அந்த அரசைப் பேச்சுவார்த்தைக்கோ அல்லது அதிகார மாற்றத்திற்கோ இணங்க வைப்பதே அமெரிக்காவின் தற்போதைய உத்தியாக உள்ளது.

Tags:    

Similar News