உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்தி 4 பேரை கொன்ற மாணவனின் பெற்றோருக்கு 10 ஆண்டு சிறை

Published On 2024-04-10 05:57 GMT   |   Update On 2024-04-10 06:42 GMT
  • மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
  • வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.

இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News