உலகம்

ஏவுகணைகளை செலுத்தும் வாகனங்கள் தயாரிப்பை அதிகரிக்க வடகொரிய அதிபர் உத்தரவு

Published On 2024-01-05 04:07 GMT   |   Update On 2024-01-05 04:07 GMT
  • உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் நடத்தி வரும் நிலையில் வடகொரியா உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு.
  • எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் முடிவு.

வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலம் அணுஆயுதம் தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. தென்கொரியா உடன் அமெரிக்கா இணைந்து கொரியா தீபகற்பத்தில் போர் பயிற்சி மேற்கொள்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது வடகொரியாவை ஆத்திரமூட்டச் செய்துள்ளது.

இதனால் தங்களுடைய ஆயுத பலங்களை அதிகரிக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளார். தற்போது உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை லாஞ்சர்களை ரஷியாவுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவலின்படி வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அமெரிக்கா தங்களை கண்காணித்து வருவது நாட்டின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருதும் கிம் ஜாங் உன், ஏவுகணைகளை செலுத்தும் மொபைல் லாஞ்ச் வாகனங்களை இன்னும் அதிக அளவில் தயாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மொபைல் லாஞ்ச் வாகனம் மூலம் வடகொரியாவின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகைளை செலுத்த முடியும். கடந்த வாரம் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை முற்றிலும் அழித்து விடுங்கள் என உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொக்கிஷமான வாளை கூர்மையாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அணுஆயுதங்களைத்தான் பொக்கிஷமான வாள் என கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார் என வடகொரியா- அமெரிக்கா மோதல் தொடர்ந்து கண்காணித்து வரும் உலக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News