உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பிற்கு நிதியுதவி அளிக்கிறாரா மஸ்க்?

Published On 2024-03-06 10:17 GMT   |   Update On 2024-03-06 10:17 GMT
  • பிரசார நிதிக்காக பல தொழிலதிபர்களை டிரம்ப் சந்தித்து பேசி வருகிறார்
  • பாம் பீச் விமான நிலையத்தில் இருவரின் விமானங்களையும் கண்டதாக செய்திகள் வெளியாகின

அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

தனது பிரசாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார்.

இந்நிலையில், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் டொனால்ட் டிரம்ப் நடத்திய பல பிரமுகர்களுடனான சந்திப்பில் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

பாம் பீச் விமான நிலையத்தில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரின் விமானங்களும் ஒரு மணிக்கும் குறைவான கால இடைவெளியில் வந்திறங்கியது குறித்து முன்னரே தகவல்கள் வெளியாகின.

2024 அதிபர் தேர்தல் போட்டிக்கு டிரம்பை எலான் மஸ்க் ஆதரிப்பாரா என்பது தற்போது வரை தெரியவில்லை.

2022ல் தனக்கு ஆதரவாக மஸ்க் வாக்களித்ததாகவும் அதை அவரே ஒப்பு கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது மஸ்க் மறுத்தார்.

இதுவரை அமெரிக்காவின் இரு கட்சிகளில் எந்த கட்சியையும் சாராதவராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கும்  உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிரம்பை ஆதரிக்கும் பட்சத்தில், பைடனின் வெற்றி வாய்ப்புகள் பெருமளவு குறையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News