உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - இந்தியாவை ஆதரிக்கும் மஸ்க்

Published On 2024-01-23 15:34 IST   |   Update On 2024-01-23 15:34:00 IST
  • அன்டோனியோ குடெரஸ் சமகால சவால்களை உணர வேண்டும் என கருத்து தெரிவித்தார்
  • நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம் பெறாதது ஏன் என ஐசன்பர்க் கேள்வி எழுப்பினார்

டெஸ்லா, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), எக்ஸ்ஏஐ (xAI) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் நிறுவனர், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான 52 வயதான எலான் மஸ்க் (Elon Musk).

இவர் பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் தனது வெளிப்படையான அதிரடி கருத்துகளுக்கு பெயர் போனவர்.

இந்நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரஸ், தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் குழுவில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த எந்த நாட்டிற்கும் இடம் இல்லாதது கவலையளிக்கிறது. 80 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை உலக அமைப்புகள் கடந்து தற்போது உள்ள சமகால சவால்களையும், உண்மை நிலவரத்தையும் உணர வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க-இஸ்ரேல் வம்சாவளி தொழிலதிபரான மைக்கேல் ஐசன்பர்க் (Michael Eisenberg), "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் அமைப்பில் இந்தியா இடம் பெறாதது ஏன்? ஐக்கிய நாடுகள் (UNO) அமைப்பை கலைத்து விட்டு ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்" என எக்ஸ் கணக்கில் கருத்து தெரிவித்தார்.

ஐசன்பர்கின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

வருங்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பையும், அதன் கிளை அமைப்புகளையும் கலைத்துதான் ஆக வேண்டும்.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவை போன்ற பெரிய நாடு, ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராக ஏற்கப்படாதது அறிவற்ற செயல்.

அத்துடன் ஆப்பிரிக்காவிற்கும் அப்பதவி அளிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு மஸ்க் பதிவிட்டார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளும், 10 நிரந்தரம் அல்லாத உறுப்பினர் நாடுகளும் உள்ளன.

15 நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகளில் ஒரு நாடு எதிர்த்து வாக்களித்தாலும், அத்தீர்மானம் தோற்றதாக கருதப்படும்.

Tags:    

Similar News