உலகம்

தலையில் தாக்கியது கல் அல்ல... நரம்பியல் சிகிச்சையில் அதிசயம்

Published On 2024-01-23 13:08 GMT   |   Update On 2024-01-23 13:08 GMT
  • ஃபேசியோ திடீரென தனது தலையில் ஏதோ தாக்கியதை உணர்ந்தார்
  • ஃபேசியோவின் வலது கை படிப்படியே செயல் இழக்க தொடங்கியது

தென் அமெரிக்க நாடுகளிலேயே மிகப் பெரிய நாடு, பிரேசில். இதன் தலைநகரம் பிரேசிலியா (Brasilia).

கடந்த 2023 டிசம்பர் இறுதியில், பிரேசிலின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) பகுதியில், கேபோ ஃப்ரியோ (Cabo Frio) கடற்கரையில் மேடியஸ் ஃபேசியோ (Mateus Facio) எனும் 21 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஃபேசியோவின் தலையில் ஏதோ தாக்கியதை உணர்ந்தார். அவர் தலையிலிருந்து ரத்தம் வழிந்தது.

வலியால் ஒரு சில நிமிடங்கள் தடுமாறியவர், எங்கிருந்தோ வந்த கல்லோ, வேறு ஏதோ பொருளோ தாக்கியிருக்க வேண்டும் என கருதினார்.

ஒரு சில நிமிடங்கள் மண்டைக்குள் ஒரு சிறு குண்டு வெடிப்பை போல் உணர்ந்தாலும், சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நின்றதால், ஃபேசியோ குளித்து விட்டு நண்பர்களுடன் மீண்டும் கொண்டாட்டங்களில் ஈடுபட சென்றார்.

இரவு முழுவதும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அடுத்த நாள் புது வருடத்தை கொண்டாட தனது சொந்த ஊரான மினாஸ் கெராய்ஸ் மாநிலத்திற்கு புறப்பட்டார். சுமார் 320 கிலோமீட்டர் பயணத்தின் போது, அவரது வலது கையில் ஆங்காங்கே பிடிப்பு ஏற்பட்டு வாகனத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டார்.

வீட்டிற்கு சென்ற 2 தினங்களில் அவரது வலது கை செயலிழக்க ஆரம்பித்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

அதில், அவரது மூளை பகுதியில் ஒரு துப்பாக்கி குண்டின் சிறு பகுதி நுழைந்து, அங்கேயே தங்கி, அழுத்தம் கொடுத்து வருவதும், அதன் காரணமாக அவர் வலது கை செயலிழக்க தொடங்கியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

குறைந்த அளவே வெற்றி வாய்ப்புள்ள, 2 மணி நேரம் நடைபெற்ற உயிருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சையின் மூலம் அந்த துப்பாக்கி குண்டின் சிறு பகுதியை நரம்பியல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சை குழுவிற்கு ஃப்ளேவியோ ஃபால்கோமிட்டா எனும் அந்நாட்டின் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் தலைமை வகித்தார்.

தற்போது ஃபேசியோ உடல்நலம் தேறி வருகிறார்.

காவல்துறையினருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News