உலகம்

மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. ஏகாதிபத்தியதிற்கு எதிராக வெனிசுலா மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - துணை அதிபர்

Published On 2026-01-04 08:33 IST   |   Update On 2026-01-04 08:33:00 IST
  • வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
  • ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வெனிசுலா மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.

வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, "வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும்.

அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் எங்கே இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கான ஆதாரத்தை டிரம்ப் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.

வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு கொடூரமான செயல். இது சர்வதேச சட்டங்களை முற்றிலும் மீறிய அராஜகம்.

எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்து பாதுகாப்புப் படைகளையும் நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வெனிசுலா மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.

அதிபர் மதுரோவை பிடித்துச் சென்றதன் மூலம் எங்களைப் பணிய வைக்கலாம் என்று அமெரிக்கா நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. நாங்கள் இறுதிவரை போராடுவோம்" என்று தெரிவித்தார்.

துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இப்போது தற்காலிகமாகப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.

இருப்பினும், மதுரோவை மீண்டும் கொண்டு வரும் வரை தான் அதிபராகப் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும், மதுரோவே நாட்டின் சட்டப்பூர்வமான தலைவர் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News