லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலெய்வ் நகரில் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து எந்த தானியத்தையும் திருடவில்லை என்று ரஷியா திட்டவட்டமாக கூறி உள்ளது. உக்ரைன் கூறிய குற்றச்சாட்டுகளை துருக்கி விசாரித்து வருவதாகவும், தானியங்களை துருக்கிக்கு கொண்டு வர அனுமதிக்காது என்றும் கூறியது. ஜூன் மாத தொடக்கத்தில் துருக்கி நாட்டுக்கான உக்ரைன் தூதர், உக்ரைனிலிருந்து ரஷியா திருடிய தானியங்களை பெற்றவர்களில் துருக்கியைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகக் கூறினார். மேலும் இந்த தானிய ஏற்றுமதிகளில் தொடர்புடைய நபர்களை பிடிக்க துருக்கியின் உதவியை நாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷிய படைகளுடன் போரிட்டு வருகிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலையில், உக்ரைன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட கால நிதி உதவியின் அவசியம் குறித்து ஜி7 தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று ஜெர்மன் அதிகாரி ஒருவர் கூறினார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு உயர்தர மற்றும் வெளிப்படையான முதலீடுகளை வழங்குவதற்கான புதிய உள்கட்டமைப்பு முயற்சியை ஜி7 நாடுகளின் தலைவர்கள் தொடங்குவார்கள் என்று அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு என்ற மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கு பதிலடியாக இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷிய படைகள் பெரிய அளவில் நடத்தி வரும் வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், ஒட்டுமொத்த டான்பாஸ் பகுதியையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். மேலும், இந்த போர்க்களத்தில் ரஷியாவை எதிர்கொள்வதற்கு நட்பு நாடுகள் கனரக ஆயுதங்களை அனுப்புவதை துரிதப்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜெர்மனியில் நடைபெற் உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்கள். அப்போது ரஷியாவுக்கு அளிக்கும் அழுத்தத்தை எவ்வாறு மேலும் அதிகரிப்பது என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.
ரஷியாவிற்கு எதிராக பிரிட்டன் இன்று ஒரு புதிய வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தியிருப்பதாக அரசு இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
யுனெஸ்கோவில் இருந்து ரஷியாவை வெளியேற்றவேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. உலக பாரம்பரிய தளங்களின் நிலை குறித்து விவாதிக்க ரஷியா இந்த மாதம் கசான் நகரில் நடத்தவிருந்த கூட்டத்தை யுனெஸ்கோ காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.