உலகம்

VIDEO: காசாவுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற கிரேட்டா தன்பெர்க் கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல் ராணுவம்

Published On 2025-06-10 00:20 IST   |   Update On 2025-06-10 00:20:00 IST
  • காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.
  • கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் கடந்த வாரம் பயணத்தை தொடங்கியது.

காசாவுக்குள் கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.

அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்  தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல்  ஜூன் 1 ஆம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து கப்பல் புறப்பட்டது.

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.

காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணக்குழுவில் உள்ளனர்.

இந்நிலையில் கப்பலை கைப்பற்றியுள்ள இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மேடலின் கப்பலையும் தன்னார்வலர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தனது படுகொலைகளைத் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசாவில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உணவு தேடி உதவி மையம் வந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்துள்ளனர்.  

Tags:    

Similar News