உலகம்

காசா மருத்துவமனைகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்.. பதிலுக்கு 4 ராணுவத்தினரை கொன்ற ஹமாஸ்

Published On 2025-09-19 06:09 IST   |   Update On 2025-09-19 06:09:00 IST
  • கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார்.

காசாவில் இஸ்ரேல் தரைவழியாக பீரங்கிகள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை 65,100 ஐ தாண்டியுள்ளது. மக்கள் நகரை விட்டு அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

நேற்று, காசாவில் உள்ள மருத்துவமனைகள் அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. காசா நகரில் தரைவழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

காசாவில் உள்ள அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி 15 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று தெற்கு காசாவின் ரஃபாவில் ஹமாஸ் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேஜர் ஓம்ரி சாய் பென் மோஷே (26), லெப்டினன்ட் எரான் ஷெலெம் (23), லெப்டினன்ட் ஈதன் அவ்னர் பென் இட்ஷாக் (22), மற்றும் லெப்டினன்ட் ரான் அரிலி (20) ஆகியோர் கொல்லப்பட்டனர். நேற்று காலை 9:30 மணிக்கு ஹமாஸ் போராளிகள் அவர்கள் பயணித்த இராணுவ வாகனத்தைத் தாக்கினர்.

இதற்கிடையே இஸ்ரேலிய துறைமுக நகரமான ஈலாட் மீது ஹவுத்திகள் நேற்று ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஹோட்டல் தீப்பிடித்தது.

மேலும், மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான ஆலன்பி கிராசிங்கில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜோர்டானிய லாரி ஓட்டுநர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர் இஸ்ரேலியர்கள் மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார். சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

Tags:    

Similar News