இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரம்.. 110 இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து ஆர்மேனியாவுக்கு வெளியேற்றம்
- இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக தெஹ்ரானில் இருந்த 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
மேலும் தெஹ்ரானில் இருந்து சொந்த ஏற்பாடுகளில் வெளியேறக்கூடிய மற்ற இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் 24/7 அவசர உதவி எண்ணை (98 9128109115, 98 9128109109) அமைத்துள்ளது. வாட்ஸ்அப் எண்களும் (98 901044557, 98 9015993320, 91 8086871709) வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணு, ஏவுகணை மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தியா இரு நாடுகளையும் பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களுடன் நிலைமை குறித்து விவாதித்தார்.