உலகம்

காபூலில் 10 மாதங்களுக்கு பிறகு இந்திய தூதரகம் திறப்பு

Published On 2022-06-24 06:56 GMT   |   Update On 2022-06-24 06:56 GMT
  • கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி டெல்லி திரும்பினார்கள்.
  • தலிபான் மூத்த தலைவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு கடுமையான கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி டெல்லி திரும்பினார்கள்.

இந்திய தூதரகமும் மூடப்பட்டது. இதனால் 10 மாதங்களாக தூதரகம் செயல்படாமல் முடங்கியது.

இந்த நிலையில் காபூலில் மீண்டும் இந்திய தூதரகம் நேற்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி இந்திய தொழில்நுட்ப குழுவினர் காபூல் சென்று உள்ளனர்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில் நுட்ப குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று உள்ளனர். சமீபத்தில் தலிபான் மூத்த தலைவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்துபேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் என்று குறிப்பிட்டு உள்ளனர்,

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்து விட்டனர். பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்து உள்ளது.

இதையடுத்து நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் காபூல் புறப்பட்டு சென்றது.

இந்த பொருட்கள் அங்குள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News