தாய்நாட்டைக் காக்க ஆயுதம் ஏந்த தயங்கமாட்டேன்.. டிரம்ப் மிரட்டலுக்கு கொலம்பியா அதிபர் பெட்ரோ பதிலடி
- கொலம்பியாவை ஆளும் பெட்ரோவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது.
- பலத்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கப் படைகள் பிடித்துச் சென்றதைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பியாவையும் குறிவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "வெனிசுலா முடிந்துவிட்டது, அடுத்து கொலம்பியா தான். அங்கிருந்துதான் அமெரிக்காவிற்கு அதிகளவில் கொக்கைன் கடத்தப்படுகிறது. கொலம்பியாவை ஆளும் பெட்ரோவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
மேலும் கொலம்பியா மீது ராணுவ தாக்குதலும் சரியான விஷயம் தான் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார்.
டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்குச் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பெட்ரோ, "வெனிசுலாவில் நடத்தியது போன்ற தாக்குதலைக் கொலம்பியாவில் நடத்த முயன்றால், அதற்குப் பலத்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இனி ஒருபோதும் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று நான் உறுதி ஏற்றிருந்தேன்.
ஆனால், எனது தாய்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மீண்டும் ஆயுதம் ஏந்த நான் தயங்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் கொரில்லா போராளியான பெட்ரோ, கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர் ஆவார்.