உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
- பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும்.
- இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்கஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் யாரையும் பின்தங்க வைக்காத வகையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்வில் பிரதமர் மோடி பேசினார்.
பின்னர் நடந்த 2-வது அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இயற்கை பேரழிவுகள் மனிதகுலத்திற்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளன. இந்த ஆண்டும், இயற்கை பேரழிவுகள் உலகம் முழுவதும் பெரும் மக்களை பாதித்துள்ளன. இது இயற்கை பேரழிவுகளை நிவர்த்தி செய்ய உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை தெளிவாக காட்டுகிறது.
பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும். எனவே பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவ வேண்டும். இதனுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஜி-20 நாடுகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களைத் திரட்டி, மீள் தன்மை கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.
விண்வெளி தொழில்நுட்பம் அனைத்து மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியாவும் நம்புகிறது. எனவே இந்தியா ஜி-20 திறந்த செயற்கைக்கோள் தரவு கூட்டாண்மையை முன்மொழிகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் பிற சவால்கள் காரணமாக, நமது விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகி வருகிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நாடுகளில் விவசாயிகள் உரங்கள், தொழில்நுட்பம், கடன், காப்பீடு மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா தனது சொந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.
வலுவான உலகளாவிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஜி20 நாடுகள் ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், நிலையான விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலையை ஒருங்கிணைக்கும் விரிவான உத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.