உலகம்

உனக்கு ஷாருக் கானை தெரியுமா?.. இந்தியரை கடத்தி வீடியோ வெளியிட்ட சூடான் போராளிகள்

Published On 2025-11-04 05:52 IST   |   Update On 2025-11-04 05:52:00 IST
  • ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர்.
  • சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன.

ஆப்பிரிக்க நாடான சூடானில், உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கு அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வரும் துணை ராணுவத்தினரால் (RSF) இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

அவர் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ஆதர்ஷ் பெஹெரா என்று தெரியவந்துள்ளது.

அவரிடம் RSF போராளிகள் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இரண்டு RSF போராளிகளுக்கு இடையில் உள்ள ஆதர்ஷ் -இடம் ஒரு போராளி, "ஷாருக்கானை  உனக்கு தெரியுமா?" என்று கேட்கிறார்.

மற்றொருவர் RSF குழுவை வழிநடத்தும் தங்கள் தலைவரான முகமது ஹம்தான் டகலோ-வை புகழ்ந்து கோஷம் எழுப்பும்படி ஆதர்ஷ்-ஐ கட்டாயப்படுத்துகிறார்.

ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர். அவர் 2022 முதல் சூடானில் உள்ள சுக்ரதி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சூடான் தலைநகர் கார்ட்டூமில் இருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் உள்ள அல் ஃபாஷிர் நகரத்திலிருந்து பெஹெரா கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன. அங்கிருந்து அவர் நியாலா நகரத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இந்தியாவிற்கான சூடான் தூதர் முகமது அப்துல்லா அலி எல்டோம் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அல் ஃபாஷிரில் உள்ள தகவல் தொடர்பு அமைப்பு முற்றிலுமாக சரிந்துவிட்டது.

அங்கு அவர்களுடன் யாரும் பேச முடியவில்லை. பெஹெராவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.   

Tags:    

Similar News