உலகம்

காலிஸ்தான் அமைப்பு தலைவரை கொல்ல சதி- அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

Published On 2026-02-14 12:14 IST   |   Update On 2026-02-14 12:14:00 IST
  • இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
  • இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

இந்தியாவில் பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக்கோரி காலிஸ்தான் அமைப்புகள் போராடி வருகிறார்கள். இதில் குர்பத்வந்த் சிங் பன்னூனின் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட குர்பத்வந்த் சிங் பன்னூன், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்றவர். அவரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு செக்குடியரசு நாட்டில் இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் மீதான நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது.

அப்போது அமெரிக்க குடிமகனான பன்னூனைக் கொலை செய்ய முன்னாள் இந்திய உளவுப் பிரிவு அதிகாரி விகாஸ் யாதவுடன் இணைந்து நிகில் குப்தா சதி திட்டம் தீட்டியதாகவும், இந்தக் கொலை முயற்சியை தாங்கள் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அரசு கோர்ட்டில் தெரிவித்தது. இதை நிகில் குப்தா மறுத்து இருந்தார்.

மேலும், இதில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் நிகில் குப்தா தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் கோர்ட்டில் ஒப்பு கொண்டு உள்ளார்.

நியூயார்க் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது பன்னூனை கொலை செய்ய சதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 54 வயதான நிகில் குப்தா மீது கூலிக்குக் கொலை செய்தல், கொலை செய்யச் சதித் திட்டம், பண மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.

அவருக்கான தண்டனை விவரம் வருகிற மே 29-ந் தேதி அறிவிக்கப்படும். இதில் அவருக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும் போது,"நிகில் குப்தா அமெரிக்க நீதிபதி சாரா நெட்பர்ன் முன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு மே 29-ந் தேதி அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மர்ரெரோ தண்டனை விதிக்க உள்ளார்" என்றனர்.

Tags:    

Similar News