அமெரிக்காவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ- 2 ஆயிரம் பேர் வெளியேற்றம்
- அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
- தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அடுத்தடுத்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவின.
இதனால் அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
இதற்கிடையே தீயை அணைக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் அதனை சுற்றியுள்ள 175 இடங்களில் தீ பரவியது.
இதில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே வட கரோலினா மாகாண கவர்னர் ஹென்றி மெக்மாஸ்டர் அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக நடைபெறும் பணியில் இதுவரை 30 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. எனவே தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.