உலகம்

அணுஆயுத தாக்குதல் நடந்தால் கிம் ஜாங்-உன் ஆட்சி காலி: எச்சரிக்கும் தென்கொரியா

Published On 2023-07-22 06:29 GMT   |   Update On 2023-07-22 06:29 GMT
  • தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் அதிகரிப்பை தொடர்ந்து வடகொரியா எச்சரிக்கை
  • இன்று காலை குரூஸ் ஏவுகணைகளை அதிக அளவில் ஏவி அச்சுறுத்தியது

ராணுவ உதவி அளிக்கும் விதமாக தென்கொரிய- அமெரிக்க அணுஆயுத ஆலோசனை குழுவின் முதல் சந்திப்பு தென்கொரியாவில் நடந்தது.

இதன் பின்னணியில் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கெண்டுக்கி (USS Kentucky) எனும் அணு ஆயுத ஏவுகணையை தாங்கி செல்லும் 18,750 டன் எடையுள்ள நீர்மூழ்கி கப்பல் ஒன்று தென்கொரியாவின் தென்கிழக்கு துறைமுக பூஸான் நகரை வந்தடைந்தது.

"பல ராணுவ மூலோபாயங்களை கையாண்டு வருவதையும், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவில் நிலைநிறுத்துவதையும் அமெரிக்கா நிறுத்தாவிட்டால் பதில் நடவடிக்கையாக அணுஆயுத பிரயோகம் செய்வோம்" என வடகொரியா எச்சரித்தது.

தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா நெடுந்தூரம் சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் 2 குறுகிய தூர ஏவுகணைகளையும் இம்மாதம் 12-ம்தேதி பரிசோதனை செய்தது. இதனையடுத்து கொரிய எல்லையில் பதட்டம் உருவானது. இதற்கிடையே குரூஸ் ஏவகணைகளை அடுத்தடுத்து ஏவியது.

இதுகுறித்து தென்கொரியா அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகொரியா ஏதேனும் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் கிம் ஜாங்-உன் ஆட்சியின் முடிவாக அது அமைந்துடும். தென்கொரிய- அமெரிக்க கூட்டணிக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதற்கு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

வடகொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை பரிசோதனைகளும் ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மாங்னகளுக்கெதிரான சட்ட விரோத நடவடிக்கைகளாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News