உலகம்

அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை நுழைவு வாயில் மீது காரை மோதிய வாலிபர்

Published On 2024-01-09 04:12 GMT   |   Update On 2024-01-09 04:12 GMT
  • பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
  • சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி நேற்று ஒரு மர்ம கார் வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவு வாயில் மீது பயங்கரமாக மோதினார்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இது தற்செயலாக நடந்த விபத்தா?அல்லது சதி செயலில் ஈடுபடும் வகையில் அவர் காரை மோதினாரா? என்பது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. அவர் வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்.

வெள்ளை மாளிகையில் இது போன்ற அத்துமீறல்கள் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு பராக் ஒபாமா அதிபராக இருந்த போது ராணுவ வீரர் ஒருவர் வெள்ளை மாளிகை புல்வெளி பகுதியில் சட்டைப்பையில் கத்தியுடன் நுழைந்து பரபரப்பாக்கினார்.

இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை வேலியை அளந்த ஒருவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News