லாவோசில் கடத்தப்பட்ட 67 இந்தியர்கள் மீட்பு- தாயகம் அனுப்ப நடவடிக்கை
- தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
- மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வியன்டியான்:
கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை அங்குள்ள ரவுடி கும்பல் கடத்திச்செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.
அந்தவகையில் லாவோசின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த இந்தியர்கள் 67 பேர் மோசடி கும்பலால் கடத்தப்பட்டு போகியோ மாகாணத்தில் உள்ள சைபர் மோசடி மையங்களில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
அந்த ரவுடி கும்பலால் பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்த இந்தியர்கள், தங்களை மீட்குமாறு தலைநகர் வியான்டியானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் லாவோஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் ஒரு குழுவை அந்த மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அதிரடியாக செயல்பட்டு 67 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் வியான்டியானுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள அவர்களை இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களது அனுபவங்களை கேட்டறிந்த அவர், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஏஜென்டுகள் மீது புகார் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் லாவோசில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள 67 பேரையும் சேர்த்து மொத்தம் 924 இந்தியர்கள் இதுவரை ரவுடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 857 பேர் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
அதேநேரம் தாய்லாந்துக்கு பணிக்கு அனுப்பி வைப்பதாக வெளியாகும் தகவல்களை குறித்தும், இந்த ஏஜென்டுகளை குறித்தும் கவனமாக இருக்குமாறு இந்தியர்களை லாவோசில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.