உலகம்
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21 ஆக அதிகரிக்க திட்டம்- ஜோ பைடன்

Published On 2022-06-03 07:57 IST   |   Update On 2022-06-03 13:49:00 IST
பள்ளிகளுக்கு,கடைகளுக்கு செல்வதற்கான நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு,பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில்  தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.  

முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம். அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும். பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். 

இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல.  நமது குழந்தைகளை, குடும்பத்தினரை, சமூகத்தினரை பாதுகாப்பதற்காகத்தான். பள்ளிகளுக்கு, தேவாலயங்களுக்கு, கடைகளுக்கு செல்வதற்கான நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகத்தான். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News