உலகம்
கோத்தபய ராஜபக்சே

இலங்கைக்கு ஜப்பான் நிதி உதவி கிடைக்கும்: கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை

Published On 2022-05-27 02:58 GMT   |   Update On 2022-05-27 02:58 GMT
இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது.
கொழும்பு:

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது. எரிபொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் ரூ.3,250 கோடி கடனை இலங்கை நாடி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கே பணம் இன்றி இலங்கை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், ஆசியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் 27-வது சர்வதேச மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே காணொலிக்காட்சி வழியாக பேசியபோது கூறியதாவது:-

இலங்கையின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய பங்காளி ஆகும். இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை களைகிற வகையில் தேவையான நிதி உதவியை ஜப்பான் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் இலங்கையின் சுற்றுலா துறை முடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் உள்நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைந்து விட்டது. வெளிநாட்டு கடன்கள் ஒருபுறம், பண வீக்கம் மறுபுறம் என்று இலங்கை நெருக்கடியில் இருக்கிறது. நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக உழைக்கிறோம். நாங்கள் சர்வதேச நண்பர்களிடம் அவசர உதவியை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அத்தியாவசிய மருந்துகள், உணவு பொருட்கள், எரிபொருட்கள் தேவையை சந்திப்பதற்கு இந்த நிதி உதவி வேண்டும்.

இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். கடினமான இந்த தருணத்தில் நாட்டிற்கு ஆதரவை வழங்க வேண்டுகிறோம் என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News