உலகம்
ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பாராளுமன்றம்

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு

Published On 2022-04-11 12:13 GMT   |   Update On 2022-04-12 09:38 GMT
இம்ரான் கான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று, முன்னாள் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது அந்நாட்டு எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமர் தேர்வு போட்டியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதருமான  ஷபாஸ் ஷெரீப் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. 

இந்த போட்டியில் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ.) சார்பில் ஷா மஹ்மூத் குரேஷி மனுத்தாக்கல் செய்திருந்தார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் இன்று கூடியது. புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதை தனது கட்சி புறக்கணிப்பதாக ஷா மஹ்மூத் குரேஷி  அறிவித்தார்.அவரது கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதனால் எதிர்கட்சி வேட்பாளரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் தலைவருமான ஷபாஸ் ஷெரீப், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் புதிய பிரதமராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று இரவே அவர் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக பிடிஐ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று, முன்னாள் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News