செய்திகள்
தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங்

அமெரிக்காவில் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங் காலமானார்

Published On 2021-01-25 00:29 IST   |   Update On 2021-01-25 00:29:00 IST
அமெரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங் உயிரிழந்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளர் லாரி கிங் உயிரிழந்தார். அவருக்கு வயது 87.‌ 1950 மற்றும் 1960-களில் வானொலி தொகுப்பாளராக இருந்த லாரி கிங், பிறகு தொலைக்காட்சி நெறியாளராக மாறினார். உலக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களுடனான நேர்காணல் மூலம் லாரி கிங் உலக அளவில் புகழ் பெற்றார்.தனது 60 ஆண்டுகால தொலைக்காட்சித் துறை வாழ்க்கையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான நேர்காணல்களை லாரி கிங் நடத்தியுள்ளார்.

ஜெரால்ட் போர்டு முதல் ஒபாமா வரை பதவியில் இருந்த பல அமெரிக்க ஜனாதிபதிகளுடனும், உலக தலைவர்கள் பலருடனும் இவர் நேர்காணல்களை நடத்தியுள்ளார்.

அதேபோல் மார்ட்டின் லூதர் கிங், தலாய்லாமா, நெல்சன் மண்டேலா போன்ற உலகப் புகழ்பெற்ற நபர்களையும் லாரி கிங் நேர்காணல் செய்துள்ளார்.எம்மி, பிபாடி, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த லாரி கிங், கடந்த 2010-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

லாரி கிங்குக்கு மொத்தம் 7 மனைவிகள் அவருக்கு 8 முறை திருமணம் நடந்துள்ளது. அதாவது அவர் தனது மனைவிகளில் ஒருவரை 2 முறை திருமணம் செய்து கொண்டார்.கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த லாரி கிங்குக்கு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. எனினும் கொரோனா பாதிப்பால் அவர் இறந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

Similar News