செய்திகள்

தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமான உற்பத்தி குறைப்பு

Published On 2019-04-06 18:51 GMT   |   Update On 2019-04-06 18:51 GMT
தொடர் விபத்துகளால் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. #Boeing737MAX8
சிகாகோ:

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தது, பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கு கடந்த மாதம் 10-ந்தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 6 நிமிடங்களில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 157 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அதற்கு முன்பாக கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் 29-ந்தேதி இதே ரக லயன் ஏர் விமானம், இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகி 189 பேர் பலியாகினர்.

இப்படி தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் இந்த விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்தன.

இந்த விபத்துகளால் போயிங் விமான நிறுவனம் மீது அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் 2 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. விமானத்தின் தொழில் நுட்ப கோளாறுதான் விபத்துக்கு காரணம் என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இந்த விமானத்தின் மாதாந்திர உற்பத்தி இலக்கு 52-ல் இருந்து 42 ஆக குறைக்கப்படுகிறது.

தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதால் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த விமானத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால்தான் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் தயாரிப்பை குறைப்பது என போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. #Boeing737MAX8 
Tags:    

Similar News