செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா

Published On 2019-02-06 20:04 GMT   |   Update On 2019-02-06 20:04 GMT
30 ஆண்டுகளுக்கு பிறகு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #Oscars2019
வாஷிங்டன்:

ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.



யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தான் ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

இந்த நிலையில், 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Oscars2019 
Tags:    

Similar News