2025 - ஒரு பார்வை

2025 REWIND: இந்தியர்களை கவர்ந்த தமிழ்நாட்டு உணவுகள்... Top 10-ல் 3 இடங்களைப் பிடித்து அசத்தல்

Published On 2025-12-21 08:00 IST   |   Update On 2025-12-21 08:00:00 IST
  • இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும்.
  • இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் அந்த ஆண்டில் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டு தேடப்பட்டவை குறித்து கூகுள் பட்டியலை வெளியிடும். உதாரணத்திற்கு அரசியலில் அதிகம் தேடப்பட்ட தலைவர், சுற்றுலா செல்ல விரும்பி தேடிய இடம் என வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.

அந்த வகையில், 2025-ம் கூகுளில் இந்தியா அளவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களால்அதிகம் தேடப்பட்ட உணவுகளில் தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, திருவாதிரை களி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது சுவாரசியம்.

 

இட்லி

தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி. 'ரெண்டு இட்லி' என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது.

ஒரு காலத்தில் பலருக்கும் பண்டிகைகள், விருந்து, திருவிழாக்கள் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே கண்ணில் காணக்கிடைத்த இட்லி இன்றைக்கு சல்லிசாகக் கிடைக்கிறது. கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்... ஏன்... சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது.

இந்த அபூர்வ உணவு. வெகு எளிதாகக் கிடைப்பதாலேயே சாப்பிடுவதில் இதன் அளவு குறைந்து போயிருக்கலாம். ஆனால், இதன் மீதான மோகம் என்றென்றைக்கும் குறையவே குறையாது என்பதுதான் யதார்த்தம்.

அதனால் தான் என்னவோ 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் முதன்மையானது, இட்லிதான். இட்லி தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். அரிசி மற்றும் உளுந்த மாவு கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, மென்மையாக, பஞ்சு போன்று இருக்கும். இட்லிக்கு தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

திருவாதிரை களி


திருவாதிரை களி என்பது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருநாளன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் மிக முக்கியமான பிரசாதமாகும். இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும். 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் 7-ம் இடத்தில் உள்ளது. திருவாதிரை அன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் இந்த களி, உடல் ஆரோக்கியத்திற்கும், மன நிம்மதிக்கும் நல்லது எனக் கருதப்படுகிறது.

கொழுக்கட்டை


2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10-வது உணவுதான் கொழுக்கட்டை. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இது ஆவியில் வேக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட்டாகும். விநாயகர் சதுர்த்தி நாளில் செய்யக்கூடிய முக்கியமான இனிப்பாகும். ஏனெனில் இது விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படுகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று விதவிதமான முறையில் செய்வர்.

இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. அவைகள், போர்ன்ஸ்டார் மார்டினி, மோதகம், தேகுவா, உகாதி பச்சடி, பீட்ரூட் கஞ்சி, யார்க்ஷயர் புட்டிங், கோண்ட் கதிரா ஆகியவை ஆகும்.

Tags:    

Similar News