செய்திகள்

ஆப்கானிஸ்தான் - தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 22 போலீசார் பலி

Published On 2018-11-26 12:17 GMT   |   Update On 2018-11-26 12:17 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அங்குள்ள தலிபான் பயங்கரவாதிகள் போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பல மாகாணங்களில் இவர்கள் கை ஓங்கியுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ முகாம்களை குறிவித்து இவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இவர்களின் வன்முறைக்கு லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் பலியாகியுள்ளனர். தலிபான்களின் ஆதிக்கத்தை வேரறுக்க அந்நாட்டு ராணுவம் 17 ஆண்டுகளாக எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரிய அளவிலான பலனை அளிக்கவில்லை.



இந்நிலையில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்திக்குட்பட்ட ஜுவைன் மாவட்டத்தின் வழியாக சென்ற போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 வாகனங்கள் நாசமாகின. அவற்றில் வந்த 22 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ கிடங்கு மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
Tags:    

Similar News