செய்திகள்

இலங்கையில் வெப்ப மண்டல புயல், மழைக்கு 8 பேர் பலி

Published On 2018-10-08 20:32 IST   |   Update On 2018-10-08 20:32:00 IST
இலங்கையின் பல மாவட்டங்களில் வெப்ப மண்டல புயல் காற்றுடன் பெய்துவரும் கன மழைக்கு 8 பேர் உயிரிழந்தனர். #SriLankarains
கொழும்பு:

இலங்கையின் வல்லாளவிட்டா, புலத்சின்ஹலா, அகலவட்டா, மதுகாமா, படுராலியா, இன்கிரியா, படுல்லா, கலுட்டாரா, கல்லே, கெகல்லே ஆகிய மாவட்டங்களில் வெப்ப மண்டல புயல் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்திருந்தது.

இதைதொடர்ந்து, கடந்த இருநாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இம்மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

கல்லே மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கின்கங்கா ஆற்றில் கரை புரண்டு பாய்கிறது. இதனால், நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதால் கின்கங்கா, காலு, அத்தனகாலு ஓயா ஆகிய ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கலுட்டரா மாவட்டத்தில் மூன்றாம் எண் அபாய எச்சரிக்கையும், ஹல்டுமுல்லா பகுதியில் இரண்டாம் எண் எச்சரிக்கையும், படுல்லா, பஸ்ஸாரா பகுதிகளில் ஒன்றாம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழைசார்ந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #eightdeadinSriLanka  #SriLankarains
Tags:    

Similar News