செய்திகள்

2 பெண்கள் செக்ஸ் புகார்: அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட கவனாக் மறுப்பு

Published On 2018-09-25 19:20 GMT   |   Update On 2018-09-25 19:20 GMT
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட கவனாக், எந்தப் பெண்ணுடனும் தான் தவறாக நடந்தது கிடையாது என தெரிவித்துள்ளார். #DonaldTrump #Kavanaugh #SupremeCourt
வாஷிங்டன்:

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ள கவனாக் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் எழுப்பி உள்ளனர். ஆனால் தன் மீதான செக்ஸ் புகார்களை அவர் மறுத்தார். நான் எந்தப்பெண்ணுடனும் தவறாக நடந்தது கிடையாது என அவர் கூறினார்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடி ஓய்வு பெற்றதால் புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். 53 வயதான இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில் பிரெட் கவனாக் மீது கிறிஸ்டின் பிளாசே போர்டு என்ற பெண்ணும், டெபோரா ரமிரெஸ் என்ற பெண்ணும் செக்ஸ் புகார்கள் எழுப்பி உள்ளனர்.

தன்னிடம் 36 ஆண்டுகளுக்கு முன்பு பிரெட் கவனாக் அத்துமீறி நடந்து கொண்டதாக கிறிஸ்டின் பிளாசே போர்டும், 25 ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் பிரெட் கவனாக் பாலியல் ரீதியில் தவறாக நடந்ததாக டெபோரா ரமிரெசும் குற்றம் சுமத்துகின்றனர்.டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக எப்படி செக்ஸ் புகார்கள் எழுந்தனவோ, அதே போன்று இப்போது அவரால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பிரெட் கவனாக்குக்கு எதிராகவும் செக்ஸ் புகார் எழுந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செக்ஸ் புகார்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படையினரின் (எப்.பி.ஐ.) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

பிரெட் கவனாக் மீது கிறிஸ்டின் பிளாசே போர்டு எழுப்பிய செக்ஸ் புகார் பற்றி ‘பாக்ஸ் நியூஸ்’ ஒரு கருத்துக்கணிப்பே நடத்தி முடித்து விட்டது. இதில் அவரது புகாரை நம்புவதாக 36 சதவீதம் பேரும், கவனாக் மீது நம்பிக்கை தெரிவித்து 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர். 34 சதவீதம் பேர் இந்த பிரச்சினையில் யார் மீது நம்பிக்கை வைப்பது என தங்களுக்கு தெரிய வில்லை என்றும் கூறினர்.

இந்த நிலையில் பிரெட் கவனாக் தன் மீதான செக்ஸ் புகார்கள் குறித்து, தன் மனைவியுடன் ‘பாக்ஸ் நியூஸ்’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் யார் மீதும் செக்ஸ் ரீதியில் அத்துமீறி நடந்தது கிடையாது. பள்ளிக்கூடத்திலும் சரி, வேறு எப்போதும் சரி. நான் எப்போதுமே பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தி வந்து இருக்கிறேன்.

எனது வாழ்நாளில் என்னோடு வந்து இருப்பவர்களை கேட்டால் தெரியும். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி நியமனத்துக்கான செயல்முறைகள் நியாயமாக நடைபெற வேண்டும். அப்போது நான் என் நேர்மையை தற்காத்துக்கொள்ள முடியும்.

1982-ம் ஆண்டு கோடை காலத்தின்போது கனெக்டிகட் அவென்யூவில் நடந்த விருந்தின்போது பாலியல் அத்துமீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. நான் அத்தகைய விருந்தில் கலந்து கொள்ளவே இல்லை.

சம்பவத்தின்போது உடன் இருந்ததாக கூறப்படுகிறவர்களும், அப்படி ஒரு விருந்து நடந்ததாக தங்களுக்கு நினைவில் இல்லை என்று கூறி உள்ளனர். அப்போது உடன் இருந்ததாக கூறப்படுகிற 2 பெண்களில் ஒருவர், போர்டின் நீண்ட கால தோழி. அவருக்கு என்னை தெரியாது. அவர் தன் வாழ்நாளில் எந்த விருந்திலும் என்னோடு கலந்து கொண்டது இல்லை என்று கூறி இருக்கிறார். போர்டுடன் நான் எந்த உறவும் பாலியல் ரீதியில் வைத்துக்கொண்டது கிடையாது. எனக்கு தெரிந்ததெல்லாம் உண்மை. எந்தவொரு பெண்ணுடனும், என் பள்ளி நாட்களிலோ அல்லது வேறு எப்போதுமோ நான் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஜனாதிபதி டிரம்ப், தொடர்ந்து கவனாக்கை ஆதரித்து வருகிறார். இந்தப் பிரச்சினையை ஜனநாயக கட்சியினர் எழுப்புவதின் பின்னணி என்ன என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 36 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக பிரச்சினை எழுப்புகிற போர்டு, இது பற்றி அப்போது போலீசில் புகார் செய்யாதது ஏன் என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி நியமனத்துக்கு கவனாக் செனட் சபையின் ஒப்புதலை பெற்று விடுவார் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #DonaldTrump #Kavanaugh #SupremeCourt
Tags:    

Similar News