செய்திகள்

துருக்கிக்கு அமெரிக்கா மிரட்டல் - பாதிரியாரை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் நடவடிக்கை

Published On 2018-08-17 20:38 GMT   |   Update On 2018-08-17 20:38 GMT
பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். #USTurkeyClash
வாஷிங்டன்:

அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சற்று உயர்ந்து உள்ளது.


இந்த நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “பல்லாண்டு காலம் அமெரிக்கா மூலம் துருக்கி பலன் அடைந்து உள்ளது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் தேசப்பற்றாளர். அந்த அப்பாவி மனிதரை விடுதலை செய்வதற்காக நாங்கள் எதுவும் தர மாட்டோம். ஆனால் நாங்கள் துருக்கி மீது மீண்டும் நடவடிக்கை எடுப்போம்” என கூறி உள்ளார். எனவே துருக்கியில் இருந்து இறக்குமதி செய்கிற மேலும் பல பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.  #USTurkeyClash
Tags:    

Similar News