செய்திகள்

ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை

Published On 2018-08-09 13:16 IST   |   Update On 2018-08-09 13:16:00 IST
ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது. #Russia #USA #sanctions
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே சில பொருளாதார தடைகளை விதித்து இருந்தது.

கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கே ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினார்கள்.

இதில், செர்கே ஸ்கிரிபால் ரஷிய உளவு படையை சேர்ந்தவர் ஆவார். அவர் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில்தான் தாக்குதல் நடந்தது. இதில், பாதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தனர். அவர்கள் மீது ரஷியாதான் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், ரஷியா நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியது.

இது சம்பந்தமாக இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தியது. அதில், ரஷியாதான் தாக்குதல் நடத்தியது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கூறி இருக்கிறது.

இதையடுத்து ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.

இது சம்பந்தமாக அமெரிக்க அரசு செய்தி தொடர்பாளர் கெதர் நவ்ரத் கூறும் போது,




ரசாயனம் மற்றும் உயிரின ஆயுதங்களை பயன்படுத்த சர்வதேச தடை உள்ளது.

ஆனால், அதையும் மீறி ரஷியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதை நாங்களும் உறுதி செய்து இருக்கிறோம். இதனால் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷியா மீது கூறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக ரஷியா அமெரிக்கா மீது சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Russia #USA #sanctions
Tags:    

Similar News