செய்திகள்

பெட்ரோல் விலையை எதிர்த்து திரண்டெழுந்த மக்கள் - போராட்டத்தால் பணிந்த ஹைதி அரசு

Published On 2018-07-08 06:19 GMT   |   Update On 2018-07-08 06:19 GMT
ஹைதி நாட்டில் பெட்ரோல் விலையை எதிர்த்து சாலையில் டயர்களை கொளுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விலை உயர்வு வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்தது. #Haiti
போர்ட்-அயு-பிரின்ஸ்:

அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ஹைதி என்ற தீவு நாடு உள்ளது. நேற்று முன்தினம் அங்கு பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது.

அந்த அறிவிப்பு வெளியானதும் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸ் நகர வீதியில் திரண்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோடுகளில் டயர்கள் மற்றும் மரக் கட்டைகளை போட்டனர். கார்கள் மற்றும் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அரசுக்கு எதிராக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் ஹைதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கா போர்ட்-அயு- பிரின்ஸ் நகருக்கான தனது விமான சேவையை ரத்து செய்தது. அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது.

ஹைதியில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

நிலைமை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்வை வாபஸ் பெற்றது.

அதற்கான அறிவிப்பை அதிபர் ஜோவெனல் மோசி டி.வி.யில் அறிவித்தார். அதை தொடர்ந்து போராட்டம் கட்டுக்குள் அடங்கியது. #Haiti
Tags:    

Similar News