செய்திகள்

வடகொரியா கெஞ்சி கேட்டதால் தான் மீண்டும் சந்திப்புக்கு ஒப்புக்கொண்டது அமெரிக்கா - டிரம்ப் வழக்கறிஞர்

Published On 2018-06-07 03:26 GMT   |   Update On 2018-06-07 03:26 GMT
வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். #trumpkimsummit
வாஷிங்டன்:

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

பின்னர், வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல கேபல்லா விடுதியில் நடைபெற உள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #trumpkimsummit
Tags:    

Similar News