செய்திகள்

கடன் அபாயம் குறித்த பேச்சு: பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க மந்திரி பாராட்டு

Published On 2018-06-04 20:26 GMT   |   Update On 2018-06-04 20:26 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் கடன் அபாயம் குறித்த உரையை அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.
வாஷிங்டன்:

சிங்கப்பூரில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு நடந்த 17-வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசினார். அப்போது அவர், சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து பெரும் சுமையை ஏற்றி வைப்பதாக விமர்சித்தார். அதற்கு பதிலாக, அந்த நாடுகளை வளர்த்து விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், பிரதமரின் இந்த உரையை தற்போது வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து சிங்கப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடன் பெறுவதன் அபாயம் குறித்து பிரதமர் மோடி மிகவும் நல்ல கருத்தை எடுத்துரைத்தார். இது மிகவும் உண்மை. அத்துடன் புதிய செயல்திட்டத்தை வகுப்பதற்கும் வழிவகுத்து இருக்கிறது’ என்றார்.

மோடியின் உரையை கேட்டுவிட்டு அறைக்கு சென்ற பின் இரவில் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்ததாக கூறிய ஜேம்ஸ் மேட்டிஸ், இதுபோன்ற கடன்களால் உங்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை இழந்துவிடுவீர்கள் என்றும் கூறினார். அந்த உரைக்காக இந்தியாவை (மோடி) நினைவு கூருகிறேன் என்றும், அது மூத்த ஒருவரின் உரையை கேட்பதைப்போல இருந்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 
Tags:    

Similar News