செய்திகள்

டிரம்ப் விதித்த உருக்கு, அலுமினிய இறக்குமதி வரி அமல் - உலக அளவில் கண்டனங்கள் குவிந்தன

Published On 2018-06-01 22:33 GMT   |   Update On 2018-06-01 22:33 GMT
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியத்தின் மீதான புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. #DonaldTrump
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்தின் மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், கனடா, மெக்சிகோ மட்டுமல்லாது டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசு கட்சியில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து உள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக அங்கு இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு பொருட்கள் மற்றும் பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றின் மீது இறக்குமதி வரி விதித்தனர்.

டிரம்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதித்துள்ள இறக்குமதி வரி, சட்டவிரோதமானது என கூறினார். அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் அவர் கூறி உள்ளார்.

அதே நேரத்தில் தன் வரி விதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் இந்தக் கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்தார்.

இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ், உருக்கின் மீது 25 சதவீத வரி என்பது அபத்தமானது என குறிப்பிட்டார். ஜெர்மனி பொருளாதார மந்திரி பீட்டர் ஆல்ட்மையர், ஐரோப்பிய யூனியன் தரக்கூடிய பதிலடி, டிரம்ப் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்று கூறினார்.  #Tamilnews #DonaldTrump
Tags:    

Similar News