செய்திகள்

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் - போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்

Published On 2018-05-28 05:34 GMT   |   Update On 2018-05-28 05:34 GMT
பாகிஸ்தானில் கில்ஜித் பல்டிஸ்தான் தொடர்பான புதிய உத்தரவை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய பேரணியை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர். #GilgitBaltistan #protestagainstgovernment
இஸ்லாமாபாத்:

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் -பல்டிஸ்தான் பிராந்தியத்தை பாகிஸ்தான் தனது ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பிராந்தியம் கடந்த 2009-ம் ஆண்டு தனி சுயாட்சி மற்றும் அதிகாரம் கொண்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பிற பகுதிகளைப் போன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம், நிதி உதவி வழங்க பிரதமர் அப்பாஸி மே 21-ம் தேதி ஆணையிட்டார்.

இந்த பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் இந்த உத்தரவு இருப்பதாக அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அப்பகுதி மக்களும், அரசியல் தலைவர்களும் சட்டமன்றத்தை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். இந்த பேரணியை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் அறிவித்துள்ள புதிய உத்தரவை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். #GilgitBaltistan #protestagainstgovernment
Tags:    

Similar News