செய்திகள்

இந்தி நடிகர் திலீப்குமாரின் பாகிஸ்தான் வீடு இடிந்தது

Published On 2017-06-17 11:54 IST   |   Update On 2017-06-17 11:54:00 IST
பாகிஸ்தானில் உள்ள பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் பிறந்து வாழ்ந்த பூர்வீக வீடு போதிய பராமரிப்பு இல்லாததால் இடிந்து வீழ்ந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் (95). இவர் கடந்த 1922-ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவரில் மொகல்லா ஹுடாதத் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ருயிஷா ஹவானி பஜாரில் பிறந்தார்.

அங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது. தனது ‘டீன் ஏஜ்’ பருவத்தில் அங்கிருந்து புறப்பட்டு மும்பை வந்த அவர் நடிகர் ஆனார்.

தற்போது அவரது பூர்வீக வீடு கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் மூலம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அது கைபர்பக் துன்கவா மாகாண அரசின் பராமரிப்பில் உள்ளது. ஆனால் அந்த வீடு சரிவர பராமரிக்கப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது. எனவே அது சிதிலமடைந்து வந்தது.


தற்போது அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. தற்போது அந்த வீட்டின் முன் பகுதியும், கேட் மட்டுமே உள்ளன. வீட்டை பராமரித்து பாதுகாக்கும்படி கைபர் பக்துன்கவா அரசுக்கு 6 தடவை மனு அனுப்பியும் அது கண்டு கொள்ளவில்லை என பாரம்பரிய கலாசார கவுன்சில் பொதுச்செயலாளர் சகீல் வகீதுல்லா தெரிவித்தார்.

திலீப்குமார் பிறந்து வாழ்ந்த பூர்வீக வீடு சிதிலமடைந்து வருவதை அவர் மனைவி சயீரா பானு கைபர் பக்துன்கவா அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே இடிந்து கிடக்கும் வீடு புதிதாக கட்டப்படும் என தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக இயக்குனர் அப்துல்சமது தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Similar News