உலகம்

சீனாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி

Published On 2025-08-09 05:30 IST   |   Update On 2025-08-09 05:30:00 IST
  • சீனாவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
  • இதில் சிக்கி மாயமான 33 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

பீஜிங்:

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள யூசாங், லான்சோ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்தன.

இதையடுத்து மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. எனினும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர். மாயமான 33 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதேபோல், குவாங்டாங் மாகாணத்திலும் மழை வெளுத்து வாங்கியது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர். எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 4000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நிலச்சரிவால் கன்சு மாகாணத்தில் உள்ள 4 கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதற்கிடையே வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்தார். அப்போது வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியை தீவிரப்படுத்தவும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News