சூடானில் மழலையர் பள்ளி மீது டிரோன் தாக்குதல்: பலி எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு
- மழலையர் பள்ளி மீது நடத்திய தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
- இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கெய்ரோ:
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) சண்டையிட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் துணை ராணுவம் தெற்கு கோர்டோபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மற்றும் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழலையர் பள்ளி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 குழந்தைகளும் அடங்குவர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.