இபிஎஸ் கூட்டத்தில் அ.தி.மு.க டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க கொடியை அசைத்த இளைஞர்கள்
- அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
விஜய்யின் அரசியல் வருகை 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது.
அதே நேரம் அவருடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் சில கட்சிகள் ஈடுபட்டன. ஆனால் தி.மு.க. மற்றும் பா.ஜனதா மீது அவர் வைத்த கடுமையான விமர்ச னங்கள் மூலம் தனித்து போட்டியிடும் முடிவைத் தான் விஜய் தேர்வு செய்வார் என்று நினைக்க வைத்தது.
இந்த சூழ்நிலையில் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் போக்கையே மாற்றியது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விஜய் மீதான அணுகுமுறை த.வெ.க.வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களில் த.வெ.க.வினர் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொள்ள தொடங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் படங்களுடன் சுவரொட்டிகளையும் த.வெ.க.வினர் ஒட்டினார்கள்.
இந்த இணக்கமான போக்கு அ.தி.மு.க., விஜய் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இந்நிலையில், கூட்டத்தில் தவெக கொடிகளை வைத்திருந்தவர்கள் தவெகவினர் இல்லை. அதிமுக இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அதிமுக டி-ஷர்ட் அணிந்தபடி தவெக கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இபிஎஸ் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.