தமிழ்நாடு செய்திகள்

ஜிம்மில் கொடுத்த ஊக்கமருந்தை பயன்படுத்திய வாலிபர்- 3 நாட்களாக சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த பரிதாபம்

Published On 2025-04-08 13:35 IST   |   Update On 2025-04-08 13:35:00 IST
  • பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயபுரம்:

காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் ராம்கி (வயது 35). மீன் வியாபாரி. இவரது மனைவி பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராம்கி கடந்த 1 ஆண்டாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ராம்கி கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடற்பயிற்சிக்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் ஜிம்மில் சேர்ந்தார். அங்கு கடந்த 6 மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற ராம்கிக்கு ஊக்கமருந்தை உடற்பயிற்சியாளர் பரிந்துரை செய்து சாப்பிட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ராம்கி ஊக்கமருந்து பயன்படுத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ராம்கிக்கு பயங்கர வயிறு வலி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறுநீர் வெளியேறவில்லை.

இதனால்அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராம்கியை மீட்டு மண்ணடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராம்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜிம் பயிற்சியாளரின் அறிவுரையின் பேரில் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொண்டதால் தான் ராம்கி உயிர் இழந்து இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காசிமேடு போலீசில் புகார் செய்து உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News