தமிழ்நாடு செய்திகள்

கோவை மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு- குற்றாலம், கவியருவியில் வெள்ளப்பெருக்கு

Published On 2025-06-17 11:11 IST   |   Update On 2025-06-17 11:11:00 IST
  • பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
  • குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கோவை:

கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

ஆழியார் அணையின் மொத்த நீர்மட்ட அளவு 120 அடியாகும். தற்போது அணை நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 850 கனடி அடி நீர் வந்து கொண்டிருந்தது. 200 கன அடி நீர் பாசத்திற்காக திறந்து விடப்படுகிறது. மழை வலுக்கும்பட்சத்தில் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 4,334 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 108 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 4 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, ஆற்றுக்கு குளிக்கவோ, துணிதுவைக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சிறுவாணி அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதேபோல கோவை குற்றாலம் மற்றும் ஆழியார் அருகே உள்ள கவியருவியில் 3-வது நாளாக இன்றும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Tags:    

Similar News