கொரோனா காலத்தில் மகளிர் குழு வாங்கிய கடன் தள்ளுபடி: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெண்
- முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார்.
- எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியொட்டி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கொண்டாங்கி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது ரேவதி என்ற பெண்ணிடம் அவர் கலந்துரையாடினார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தில் ஊராட்சியில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள். அதே போல் முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார். அதற்கு அப்பெண் 24 பேர் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர் என கூறினார்.
தொடர்ந்து அவர் சுயஉதவி குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். இக்குழுவானது ஊராட்சி அளவில் தொழில் கடனாக ரூ.1.50 லட்சம் வழங்கியது. அதில் நான் 2 தையல் எந்திரம் வாங்கி கடை நடத்தி வருகிறேன். அதில் இருந்து வரும் வருமானத்தில் எனது குடும்ப செலவிற்கும், குழந்தைகள் படிப்பு செலவிற்கும் பயனுள்ளதாக உள்ளது. என்னை போல் உள்ள 2 மகளிருக்கு இந்த தொழிலை கற்று கொடுத்து அவர்களையும் வேலைக்கு வைத்துள்ளேன். என்னாலும் 2 பேருக்கு வேலை வழங்கி சம்பளம் வழங்கி வருவதை பெருமையாக தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து 3 கோரிக்கைகளை அவர் தெரிவித்தார். அதில் எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது. அதனை புதுப்பித்து தர வேண்டும். அதேபோல், கொண்டாங்கியில் இருந்து ஈச்சத்திரம் சாலையில் மின்விளக்கு அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொண்டாங்கி முதல் தொகைப்பாடி வரை சாலை பகுதியில் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் எங்கள் மகளிர் குழு கொரோனா காலத்தில் ரூ.7 லட்சம் கூட்டுறவு சங்கத்தில் வங்கி கடன் வாங்கி இருந்தோம். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு அந்த கடனை தள்ளுபடி செய்தீர்கள் அதற்கு எங்கள் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்ற தெரிவித்தார்.