தமிழ்நாடு செய்திகள்

நீலகிரி பகுதியில் பலத்த மழை- மாயாற்றை ஆபத்தான முறையில் பரிசலில் கடக்கும் கிராம மக்கள்

Published On 2025-05-26 11:04 IST   |   Update On 2025-05-26 11:04:00 IST
  • மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
  • மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாட மலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அப்பொழுது மக்கள் ஆபத்தை உணராமல் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாயாற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகரித்து வருகிறது. தற்போது கோவை மாவட்டம் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இருகரையும் தொட்டபடி நீர் பாய்ந்து செல்கிறது.

இந்நிலையில் இன்று காலை ஆபத்தை உணராமல் தெங்குமரகஹாட கிராம மக்கள் பரிசலில் பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

திடீர் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டு சில சமயம் ஊருக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். வயிற்று பிழைப்புக்காக ஆபத்தான முறையில் பரிசலில் கடந்து செல்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.

கோரிக்கை விடுத்தும் வருகிறோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News