விஜய் சொல்லும் 1967, 1977-ம் ஆண்டு தேர்தல்களில் என்ன நடந்தது?- த.வெ.க. கனவு, நனவாகுமா?
- 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.
- தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார்.
சென்னை:
விஜய் சொல்லும் 1967, 1977-ம் ஆண்டு தேர்தல்களில் என்ன நடந்தது? த.வெ.க. கனவு, நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வெளியிடும் கூட்டத்தில் நேற்று பேசும் 1967 மற்றும் 1977 சட்டமன்ற தேர்தல்களை போல, வருகிற 2026 தேர்தலும் அமைய போகிறது என்று பேசினார். அவரது பேச்சால் அந்த தேர்தல்களில் எந்த நடந்தது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதில் 1967-ம் ஆண்டு தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் ஆனார். 1977-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார். இந்த 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. அந்த அடிப்படையில் தான் விஜய், 2026-ம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. ஆட்சி அமைக்கும் என்பதை அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:- ஒரு கட்சி தலைவர், தங்களது கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று சொல்வது முதலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க தான். அந்த வகையில் தான் விஜய்யும் பேசி இருக்கிறார். எனவே அவரது பேச்சினை வைத்து த.வெ.க. ஆட்சியை பிடிக்குமா? என்று கேட்டால், அதனை மக்கள் தான் முடிவு செய்ய முடியும்.
விஜய் சொன்ன, இந்த தேர்தல்களையும், 2026-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் 1967-ம் ஆண்டு தேர்தல் மூலம் முதலமைச்சர் ஆன அண்ணா, ஒரு பழுத்த அரசியல்வாதி. அவர் 1909-ம் ஆண்டு பிறந்து 1935-ம் ஆண்டு அதாவது தனது 26-வது வயதில் நீதி கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் திராவிடர் கழகத்தில் பயணித்து 1949-ம் ஆண்டு, அதாவது தனது 40 வயதில் தி.மு.க.வை தொடங்கினார். தி.மு.க. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் பங்கேற்கவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் தான் பங்கேற்றது. முதல் முறை போட்டி என்பதால் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றனர். பின்னர் 1962-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் 7 தொகுதிகளிலும், சட்டசபையில் 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 1967-ம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்தில் 25 தொகுதிகளிலும், சட்டசபையில் 234 தொகுதிகளில் 137 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அண்ணா, முதலமைச்சர் ஆனார். அவர் தனது 58 வயதில் ஆட்சியை பிடித்தார்.
இதேபோல் தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியை கட்டமைத்தார். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் சட்டசபை தேர்தலில் 130 இடங்களிலும், பாராளுமன்றத்தில் 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க. என்ற சட்டை புதிது என்றாலும், அரசியலில் அவர் பழையவர். காந்தி மீது கொண்ட ஈடுபாட்டால் தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1953-ம் ஆண்டு அதாவது தனது 36 வயதில் தி.மு.க.வில் சேர்ந்தார். 1962, 1967 மற்றும் 1971-ம் ஆண்டு தேர்தல்களில் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பல ஆண்டுகள் அரசியலில் இருந்து, பல தேர்தல்களை சந்தித்து ஆட்சியை பிடித்தனர். ஆனால் விஜய், அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் முழுமையாக முடிவடையவில்லை. அவர் சினிமாவின் உச்ச நடிகர். மக்களுக்கு தெரிந்த முகம். ஆனால் தேர்தல் வெற்றிக்கு இது மட்டும் போதாது. கட்சியின் கட்டமைப்பும், தேர்தலை எதிர்கொள்ளும் திறனும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றை த.வெ.க. இன்னும் முழுமையாக பூர்த்தி செய்ய வில்லை.
தேர்தலின்போது ஆட்சி என்பது அனைவருக்கும் கனவு. அது த.வெ.க.விற்கு நனவாகுமா? என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எனவே விஜய், அந்த தேர்தலைகளை ஒப்பிடும்போது, அந்த தலைவர்கள் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதனையும், அவர்களது மக்கள் பணியினையும், அரசியல் அனுபவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.